சுவாமியின் ஜீவசரிதம்
அமேசான் கிண்டில்,ஆன்லைன் பிளிப் புத்தகம், பிடிஎஃப் டவுன்லோடு மூலம் சுவாமியின் ஜீவ சரிதத்தைப் படிக்க கீழே இருக்கும் இணைப்புகளை கிளிக் செய்யவும். விரைவில் அப்டேட் செய்யப்படும்.
பி.டி.எஃப். டவுன்லோடு
ஜீவசரிதம் நூல் - விரைவில்
இசுசு
விரைவில் அப்டேட் செய்யப்படும்
சுவாமியின் ஜீவசரிதம் முன்னுரை - புலவர் திரு.ஆறுமுகம் - கோவை
”நினைக்கின்றேன்! வியக்கின்றேன்! நெகிழ்கின்றேன்! சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஒப்புயர்வற்ற உயர் தனிப்பெருவாழ்வை நினைக்கின்றேன். இப்படியும் ஒரு மாமனிதர் நம் அருகில் நம்மிடையே வாழ்ந்தாரா? அப்படியும் வாழ அவரால் எப்படி இயன்றது?“ என்று வியக்கிறேன்.
இப்படிபட்ட தூய வாழ்வு, எளிய வாழ்வு, பொதுமை வாழ்வு வாழ்ந்த மகானைக் கண்டு வணங்கும் பேறு பெறவில்லையே? என்று நெஞ்சம் நெகிழ்கின்றேன்.
சேலம் மாவட்டத்தில் சின்னக்கொல்லப்பட்டி என்ற சிற்றூரில் 1938ம் வருடன் பிப்ரவரி மாதம் 15ம் தேதியன்று எளிய குடும்பத்தில் பிறந்த பெத்தாக்கவுண்டர் (சுவாமிகளின் இயற்பெயர்) சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆன அற்புதம் மெய் சிலிர்க்க வைக்கும் ஓர் உன்னத காவியமாய் விரிகிறது. துள்ளித் திரியும் பிள்ளைப்பருவத்தில் துறவு மகான் ரமணரைப் போல! சித்த யோக வித்தகரான சுவாமி சிவானந்த பரமஹம்சரின் நேரடிச் சீடர்களில் ஒருவரான குற்றாலம் சங்கரானந்த சுவாமிகளை தம் குருவாகக் கொண்டு, தீட்சை பெற்று வாசியோகக் கலையில் வல்லவராகி அவரின் அருளாசி பெற்றார், பகவான் இராமகிருஷ்ணரிடம் சுவாமி விவேகானந்தர் பெற்றது போல.
குருநாதரின் அருளுரையை ஏற்று மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொழுது கயிலை மலைச் சாரலை அடைந்து நம் சுவாமிகள் தவம், மேற்க்கொண்ட போது பகவான் ரமணரை அழைத்த அண்ணாமலை போல - நம் சுவாமிகளை தென்கயிலை என்று போற்றி வணங்கப்படும் வெள்ளிங்கிரி ஈர்த்து இழுத்து அழைத்து வந்தது.
வந்தார்! வாழ்ந்தார்! வாழ்கிறார்!
அவரால் புகழ் பெற்றது முள்ளங்காடு! அவரது வருகையால் பூண்டி புது பொலிவு பெற்றது! வெள்ளிங்கிரி ஆண்டவரின் உள்ளம் குளிர்ந்தது! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!
முள்ளங்காடு ஆசிரமத்தில் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் எழுந்தருளி தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் வாசியோகக் கனலை மூட்டினார். பிணியால் வாடி வருந்தித் தம்மைத் தேடி வந்த ஏழை எளிய மக்களுக்கு சீர்மிகு சித்த வைத்தியத்தால் சிகிச்சை அளித்து அவர்தம் கொடிய நோய்களை எல்லாம் ஓட்டினார்.
இவை எல்லாம் செய்யும் பல குருமார்களை நாம் அறிவோம். எனவே இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? என்ன இருக்கிறது? இருக்கிறதே! இருக்கிறதே!
குருக்களும் வைத்தியர்களும் காசே குறியாய் அலைகின்றனர் இன்று. படாடோபமாய்ப் பவனி வருகின்றனர் இன்று. ஆனால் தம் வாழ்நாள் முழுவதும் காசு, பணத்தைக் கையால் கூடத் தொடாத மாசு மறுவற்ற ஞானியாய்த் திகழ்ந்தார் நம் சற்குரு. மேலும் ஒரு செய்தி, மெய் சிலிர்க்க வைக்கிறது!
மார்கழித் திங்கள் ஒவ்வோர் ஆண்டும் மதி நிறைந்த முதல் நாள் தொடங்கி, தைத் திங்கள் முதல் நாள் வரை நம் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி இருந்தது எங்கு தெரியுமா? தென் கயிலை உச்சியில்! சிவ மூர்த்தியின் அருகில்! கொட்டும் பனி! குளிர்! தனிமை! விலங்குகள் நடமாட்டம்! அங்கே அவர் மட்டும் சிவத்தோடு! நினைக்கிறேன்! வியக்கிறேன்! அதுமட்டுமா? கொழுத்தும் வெயில் நிறைந்த கோடையில் மூன்று திங்களும் வெள்ளிங்கிரி உச்சியில் எழுந்தருளி அருள் வழங்கும் சிவப்பரம் பொருளுக்கு வழிபாடு செய்து வீற்றிருப்பார் நம் சற்குரு. ஆண்டில் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளிங்கிரி உச்சியிலேயே கழிந்ததால் நம் சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் என அனைவராலும் போற்றிப் புகழப்பட்டார்.
சத்தியத்தின் வடிவமாய், எளிமையின் இருப்பிடமாய் வாழ்ந்த அவர், பொன்னுடல் 1986 இல் ஜீவ ஐக்கியம் அடைந்து நுண்ணுடல் இன்றும் பலர் கண்களுக்குத் தெரிகிறது.
நூலுக்கு அணிந்துரை - (இல்லை, இல்லை - பணிந்துரை) எழுத வேண்டும் என்று முன்னால் என் அன்புக்குரிய மாணவரும், இன்னாள் என் வணக்கத்திற்குரிய துறவியருள் ஒருவருமான தவத்திரு.ஜோதி சுவாமிகள் வேண்டிப் பணிகொண்டார்.
அவர்க்கு என் அன்பும் நன்றியும். சற்குருவின் சீடர்களாய் அவரோடு உறவாடிய அனைவரையும் பணிந்து வணங்குகிறேன்.
சற்குருவின் திருவடிகளே சரணம்!
சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமியின் ஜீவசரிதம்
தெய்வத்துள் வைக்கப் படும் - திருவள்ளுவர்
நம் மனதில் தோன்றும் எண்ணங்களே தீவிரமாக அதிலேயே லயிக்கும்போது அதுவே செயலாக மாறும். அவ்வாறான எண்ணங்கள் நம்முள் பிரதிபலிக்கும். கண்களை மூடியிருக்கும் போது அது சூட்சகமாக தெரியும். ஆனால் ஜீவசமாதி அடைந்தவர்களிடம் அது மாறுபடும், ஏனெனில் சூட்சகமாக தோன்றும் அதே காட்சிகள், கண்கள் திறந்த போதும் ஸ்தூலமாகவும் தெளிவுபடும். இதுவே அவர்களின் ஆற்றல். அவ்வாறு ஸ்தூலமாகவே இருப்பவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி அவரின் ஜீவ ஒழுக்கம் பற்றிய வரலாற்றை காணலாம்.
இவருடைய பிறப்பு, சேலம் சின்னக்கொல்லப்பட்டி என்னும் சிறிய கிராமம். அவ்வூரில் வசித்த சின்னபையாக்கவுண்டர், பச்சையம்மாள் ஆகியோருக்கு பெத்தாக்கவுண்டர் என்ற பெயரில் ஐந்தாவது மகனாக மட்டும் அல்லாமல் ’மகானாகவே’ அவதரித்தார்.
இளம் வயதிலேயே அவருள் ஏற்பட்ட ஆன்மீக தேடல், விதையினுள் அடங்கிய விருட்சமாக வளரத் தொடங்கியது.
அதன் காரணமாக, தன் ஒன்பதாவது வயதில் இல்லம் துறந்து, தன் ஞான குருவை தேடி புறப்பட்டார். அதன் விளைவு குற்றாலம் ஐந்தருவியின் அருகில், தற்போது ஜீவேஸ்வர ஐக்கியம் அடைந்துள்ள பிரம்மஸ்ரீ சங்கரானந்தர் அவர்களை தன் ஞான குருவாக ஏற்று அவரிடம் பல காலம் பணிவிடை புரிந்தார். தன் குருவால் தனக்கு உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை என்ற வாசியோகத்தை முழுமையாக தன் பயிற்சியால் கற்றுணர்ந்தார்.
தான் பயின்று வந்த காலங்களில் ஆசிரமப் பணிகளை செய்தும், யாசகம் கேட்டு தான் தானமாக பெற்ற உணவை தன் குருவிற்கும், குருவிற்கு பணிவிடை செய்த மூக்கம்மா, மற்றும் தன்னோடு தீட்சை பெற்ற சுந்தரம் சாமியோடு தானும் பகிர்ந்து உண்டார். தான் செய்த வந்த கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறியதே இல்லை, அதுபோலவே தன் பெற்றோருக்கும் அவர் கடமைகளை முடித்தே வந்தார்.
பல நாட்கள் தன் குருவிற்கு சேவையையும், தன் தவ வாழ்வின் ஊக்கமாக தீவிர பயிற்சியையும் சிரமேற்கொண்டு கடைபிடித்து வந்த நிலையில் இவரின் ஞானப்பக்குவத்தை உண்ர்ந்த குரு தன் சீடனை அழைத்து, “மகனே! இறகு முளைத்த பிறகும் எந்த பறவையும் கூண்டில் அடைப்பட்டு இருக்க கூடாது, எனவே நீ உலகளவில் சுதந்திரப் பறவை, உன்னை நாடி வருபவர்க்கு மூலமும் முடிந்த முடிவுமாய் இருக்கின்ற இந்த வாசியோகத்தை கற்றுக் கொடுத்து, அவர்களும் இப்பிறவிச் சூழலில் இருந்து மீள வழிவகை செய்வாய்" என்று கட்டளை இட்டார்.
குருவின் கட்டளையின் பேரில், அவரின் பரிபூரண ஆசியுடன் வடமாநிலம் முழுவதும் கயிலை வரை யாத்திரை மேற்கொண்டார். கயிலாயம் அடைந்த நம் குருநாதர் தவ நிட்டையில் கூடியிருந்த போது தன்னுடைய ஆன்மீக கடமைகளை ஆற்றவும், மக்களின் நற்கதிக்காவும், தான் ஜீவேஸ்வர ஐக்கியம் அடையும் இடத்தை தன் ஞானத்தில் கண்டு, தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலையை அடைந்து, அங்கு குகையில் தவம் புரிந்தார்.
வெங்கடபதி, மதுரலால், தங்கவேல், பேப்பர் மருதாசலம், அருணாசலம், மற்றும் இ.எஸ்.ஐ மருந்தகத்தில் பணிபுரிந்த அன்பர்கள், டிட்டோனியம் முத்துசாமி, இடுவாய் ரங்கசாமி, மதுரலால் மற்றும் சில அன்பர்களின் உதவியோடு
தன் ஸ்தூல தேகம் ஐக்கியம் ஆகும் இடத்தை உணர்ந்து, தற்போது ஆசிரமம் அமைந்துள்ள முள்ளங்காடு என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள இயற்கை சூழந்த இந்த அற்புதமான இடத்தில் தவக்குடில் அமைத்து தவப்பணியை மேற்கொண்டார்.
தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு நல் உபதேசமும், வாசியோகத்தையும் கற்றுக்கொடுத்தார். அதுமட்டும் அல்லாமல் தான் தவத்திரு.கண்டிராஜ் சுவாமிகளிடம் முறையாக கற்றுணர்ந்த சித்த மருத்துவ முறைகளையும், தீராத வினைத்தீர்க்கும் கொடிய நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் படைத்த அரிய வகை மூலிகைகளையும், மருந்துகள் செய்யும் முறைகளையும், ஆர்வம் உள்ள மெய்யன்பர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
மேலும், கடுமையான வித்தையான இரசவாதம் என்னும் தாத்பரியத்தை தன் வசமாக்கி, அதை விட்டு விலகி, அதனினும் மேலான தவத்தை மட்டுமே மேற்க்கொண்டார். ஆனால் விரும்பி கேட்பவர்களுக்கு இரசவாதம் கற்றும் கொடுத்தார்.
அதுபோக, சித்த வித்தையோடு யோக அப்பியாசங்களையும் அதன் விளக்கங்களையும், பயன்களையும் கற்றுக்கொடுத்தார்.
ஆசிரமம் அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் தொண்ணூற்று ஒன்று வகையான அபூர்வ அரிய வகை மூலிகைகளை பயிர் செய்து பிறருக்கும் பயன்பட வழி வகை செய்தார். இவர் மருத்துவம் மட்டும் அல்லாமல் இசையிலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவராக விளங்கினார். இவர் பள்ளியில் மிக குறைந்த அளவே பயின்று இருந்தாலும், சித்தர்களின் பாடல்கள் முழுவதையும் தனது கணீர் குரலில் தானே செய்த தம்புரான் இசைக்கருவியில் கானமெழ பாடுவதோடு மட்டுமல்லாமல், பாடலின் பொருளையும் சீடர்களுக்கும், வரும் அன்பர்களுக்கும் எடுத்துரைப்பார்.
அவர் கண் அயர்ந்து யாரும் பார்த்தது இல்லை. எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார். இரவு முழுவதும் மருந்து தயாரிப்பதும், வெட்டிவேர், நன்னாரி, மேலும் சில மூலிகைகள் சேர்த்து செய்யும் தேனீர் கலவை போன்றவைகளை தயாரித்து அதை வேண்டியவர்களுக்கு கொடுப்பார்.
அவர் கோவையில் உள்ள கடைவீதியில் சென்று தருமம் வாங்கியும், அவர்கள் தரும் பொருட்களை கொண்டு இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு அவரால் இயன்ற அளவு அன்னமளித்து பசியை போக்கினார். தனக்கு ரசவாதம் தெரிந்த போதும் தன்னை எளிமையாகவே வைத்துக்கொண்டவர். அவர் யாரிடமும் சென்று கைநீட்டி பணம் வாங்கியதே கிடையாது. அதை தருமமாக நினைத்து அடியவர்களுக்கும் தன்னை நாடி வருபவருக்கும் அன்னமளிக்க பயன்படுத்தினார்.
சுவாமி அவர்கள் எப்போதும் ஒரு வேலை மட்டுமே உணவு உட்கொள்வார். அதுவும் உப்பு இல்லாத உணவு. உப்பை கையால் கூட தொடவே மாட்டார். தினமும் மதியம் பனிரெண்டு மணியளவில் அன்றைய நாட்களில் ஒரு பேருந்து மட்டுமே வரும். அதில் யாரேனும் வருகிறார்களா என்று கண்டபின் அரிசி போடுவார். எதிர்பாரமல் யாரேனும் வந்தால், சமைத்த உணவை அவர்களுக்கு பங்கிட்டு கொடுத்துவிடுவார். அன்றைய அவரின் உணவு அவ்வளவே. ஏனெனில் ஒருமுறை சமைத்து முடித்த உணவுப் பாத்திரங்களைக் கவிழ்த்து விட்டால், அடுத்த நாள் தான் மீண்டும் சமைப்பார்.
இவ்வாறாக இருந்த நாட்களில், சுவாமிகளின் சீடர்களில் சிலர் தாங்கள் சமைப்பதாக கூற சுவாமியும் அதற்கு இணங்கி ஒப்புக்கொண்டார். அவர்கள் குருவை சோதிக்கும் வண்ணம், தாங்கள் சமைத்த உணவில் திட்டமாக உப்பை சேர்த்து, அவரை சாப்பிட வைத்து விடலாம் என்று நினைத்தனர். அதன்பின்னர் சமைத்த உணவை பரிமாறும் போது, சுவாமிகளிடம் தாங்கள் உப்பை போட்ட விஷயத்தை கூறி தெரியாமல் உப்பிட்டு விட்டோம் சாப்பிட வருமாறு அழைத்தனர். ஆனால் சுவாமிகள் அதை மறுத்து அவர்களை உணவு அருந்த சொல்லிவிட்டு, தவக்குடிலின் வெளியே வந்து அமர்ந்தார்.
அங்கே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் வனத்தில் வீற்றிருக்கும் அன்னை வீரகாளியை ’முண்டச்சி’ என்று திட்டியபடி இருந்தார்.
அடுத்த சில விநாடிகளில் ஒரு பெண் உருவில் வெள்ளை புடவை உடுத்தி அன்னை ஆதிசக்தி கைகளில் சாப்பாட்டு கூடையுடன், தலைவாழை இலையுடன் அருகே வந்து, ”ம், அதான் வந்துட்டேன்ல, சாப்பிட வா" என்றாள்.
அதற்கு சுவாமிகள், “எனக்கு பசியில்லை, எனக்கு தேவையில்லை, நீ செல்லலாம்" என்றார்.
அப்பெண்ணும் சிறிது தூரம் சென்றதும் மறைந்து விட்டார்.
இதை கண்ட சீடர்கள் யார் அப்பெண் என்று ஐயத்துடன் வினவ, காலம் வரும் போது தானகவே விளங்கும் என்று சுவாமிகள் கூறினார்.
இவ்வாறாக பல சித்துக்களையும் செய்தும், பல ஒளஷதங்களும் தயாரித்து அன்பர்களுக்கு வழங்கி தன் அருமைகளை வெளிக்காட்டாமல் இருந்த சுவாமிகளின் ஆற்றலை உணர்ந்து, அவரின் ஆன்மீக மேன்மையை உணர வேண்டி, 1976ம் ஆண்டு இரண்டு மெய்யன்பர்கள் சுவாமியை நாடி வந்தனர். பொதுவாகவே சுவாமிகள் யாரிடமும் அளவளாதல் அரிது, இவர்களிடமும் அதுவே தொடர்ந்தது.
ஒருவர் சுவாமிகளின் பிரதான சீடரான மருத்துவர் நாகராஜ் மற்றும் அவருடைய நண்பர் மருத்துவர் சாந்தாராம். இவ்விருவரும் சுவாமிகளின் எளிமையான தேகக்கட்டினாலும், தீட்சண்யமான பார்வையாலும் ஈர்க்கப்பட்டு, வாரம் தவறாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆசிரமம் சென்று அவரை சந்தித்து வந்தனர்.
ஆனால் அவர்களிடம் ஒரு வார்த்தையேனும் பேசாமல் தன் வேலைகளை மட்டுமே கவனித்து வந்துள்ளார். அவர்களிடம் பேசாமல் இருந்தாலும், அந்த வனபிரதேசத்தில் அவர்களுக்கு உணவு அளித்துதான் அனுப்பி வைப்பாராம். இவ்வாறாக சுமார் ஆறு மாத காலம் நீடித்தது. இவர்களும் சுவாமிகளிடம் கொண்ட ஈர்ப்பால் வாரம் தவராமல் அவரை காண வருவதை வழக்கமாகவே வைத்துக்கொண்டனர். ஆறு மாதங்கள் கழிந்த பின்னர், இவர்களை, நோக்கி, "நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்?” இதுவே சுவாமிகள் அவர்களிடம் பேசிய முதல் பேச்சாகும்.
இவர்களும் சுவாமிகளை காண வருவதால் மன அமைதியும், சாந்தியும் ஏற்படுவதாக கூறியுள்ளனர். அதற்கு பின்னரே, சுவாமி சிவானந்த பரமஹம்சர் எழுதிய சித்தவித்தை என்ற 'சித்த வேதம்’ நூலைப் படிக்க கூறினார், அவர்கள் படிக்கும்போது அதற்கு விளக்கமும் அளிப்பாராம்.
இவ்வாறாக சுமார் ஒன்றறை வருட காலம் நீடித்தது. 1978ம் ஆண்டு சித்ரா பெளர்ணமி அன்று இருவருக்கும் தீட்சை அளித்து தன் சீடர்களாக்கி கொண்டார். இவர்களில் மருத்துவர் நாகராஜ் அவர்கள் சுவாமிகளிடம் ஏற்பட்ட அதீத நம்பிக்கையும், ஈர்ப்பும் காரணமாக தொடர்ந்து வாரந்தோரும் ஆசிரமத்திற்கு வந்து, தம் குருவிற்கு பணிவிடை செய்தும், அவர் கற்றுக்கொடுத்த வாசியை பயிற்சியும் செய்து வந்தார்.
சுவாமிகளும் அவரை தன் பிரதான ஆத்ம சீடராக ஏற்று தான் கற்றுணர்ந்த வித்தைகளில் வாசியோகத்தை முழுவதுமாக கற்றுக்கொடுத்து, நிறைய அமானுஷ்யமான நிகழ்வுகளையும், அதி அற்புதமான காட்சிகளையும் அனுபவிக்கவும் உணரவும் செய்துள்ளார். சுவாமிகள் அவர்கள் வருடம்தோறும் மார்கழி மாதம் முழுவதும் வெள்ளிங்கிரி மலையில் உள்ள கிருஷ்ண குகையில், கடுமையான சீதோஷண நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஒரு மாதம் காலம் தொடர்ந்து உண்ணா நோன்புடன் மெளனத்தையும் கடைப்பிடித்து இருப்பார். அந்த முப்பது நாட்களும் மருத்துவர் நாகராஜின் தன் வீட்டில் சமைத்த முப்பது பாசிப்பருப்பு உருண்டைகளை கொடுத்து அனுப்புவார். இதுவே அவரின் உணவாக இருந்தது. தவம் முடிந்து தை மாதம் முதல் தேதி அவர் வெள்ளிங்கிரி மலையிலிருந்து கீழே இறங்கி வருவார்.
அந்நாளில் தன் ஆத்ம சீடரான மருத்துவர் நாகராஜ் அவர்கள் தயாராக தீபம் ஏற்றி வைத்து காத்திருப்பார். அன்று ஒரு நாள் மட்டுமே தன் பாதங்களை தொடுவதற்கு அனுமதிப்பார். அந்த ஒரு நாள் மட்டும் தன் சீடர் செய்யும் பாத பூஜையை ஏற்றுக்கொள்வார். அதன் பிறகு கிருஷ்ண குகையில் தவத்தில் இருந்த அந்த ஒரு மாத காலமும் தான் கண்ட அதிசயங்கள் மற்றும் தான் அனுபவித்த உணர்ந்த அனுபவங்களை தன் சீடரிடம் பகிர்ந்துகொள்வார்.
இவ்வாறு நாட்கள் இருக்கையில் ஒரு முறை தன் சீடர் நாகராஜை அழைத்துக் கொண்டு வெள்ளிங்கிரி மலைக்கு சென்றார். மலைமேல் செல்லும் போது பல இடங்களில் குருவின் பாதம் தரையில் படாமல் பறப்பதை போல இருப்பதை மருத்துவர் கண்டார். அதேபோல், உச்சி வெய்யிலின் தாக்கத்தால் மருத்துவரின் உடல் வியர்த்து கொட்டியது, ஆனால் சுவாமிகளுக்கு வியர்வை வராததைக் கண்ட மருத்துவர் அவர்கள், “சுவாமி, உங்களுக்கு வியர்க்கவே இல்லையே, எனக்கோ வியர்வை கொட்டுது?" என்றார்.
தன் சீடரை அழைத்து தன் உடலின் அருகே நிறுத்தினார். அதன் பிறகுதான் புரிந்தது, குருவின் யோக வலிமையின் காரணமாக அவரின் உடலை சுற்றிலும் குளிர்ந்த காற்றின் தன்மை பரவியிருப்பதை உணர்ந்தார். இது பஞ்ச பூதங்களையும் தன் வசப்படுத்தியவற்கே சாத்தியம் என்பது புரிந்தது. இதன் மூலம் சுவாமியின் தவ ஆற்றலின் மேன்மையை அன்று மருத்துவர் நாகராஜ் உணர்ந்தார்.
அதன் பிறகு மலையின் கீழே இறங்கி வரும்பொழுது, படி வாசலில் மூன்று பெண்மணிகள் இவர்களின் வருகையை எதிர்பார்த்து வணங்குவதற்கு தயாராக இருப்பதை முன்பே கண்ட குருநாதர், தன் சீடரிடம், ”நாகராஜ் வந்திருப்பவர்கள் சாதாரணமானவங்க இல்லை, நான் சாஷ்டாங்கமாக விழும் போது நீயும் என்னுடன் சேர்ந்து பணிந்துவிடு" என்றார். இருவரும் ”தாயே சரணம்” என்று சர்வ சாஷ்டாங்கமாக விழுந்த அடுத்த நொடி அப்பெண்கள் மூவரும் மாயமாக மறைந்தனர்.
இதை கண்ட மருத்துவர் அவர்கள் யார் என்று குருவிடம் வினவ, ”குரத்திக அவளுக, நாம வாங்கி வந்த புண்ணியத்தை பறிச்சிட்டு போக வந்தாளுக" என்றார்.
சில நாட்கள் கழித்து சுவாமியை பார்க்க வந்த மருத்துவர் நாகராஜ் குடும்பத்தினர், அருகில் உள்ள வனத்தில் குடியிருக்கும் வீரகாளி அம்மனையும், அக்கோயிலை நிறுவிய சித்தர் சுவாமியின் ஜீவசமாதியையும் காண செல்லவேண்டும் என்று சுவாமியிடம் கூறியபோது, “சரி, போயிட்டு வாங்க, கருப்பன் துணைக்கு வருவான்" என்று கூறி தன் தவ வலிமையால் இரு கருப்பு நாய்களை துணைக்கு அனுப்பினாராம். அவைகள் யானை அருகில் வந்தால் சிங்கங்களை போல கர்ஜிப்பதை கண்டு யானைக் கூட்டமே அகன்று விடுமாம்.
இதே போலவே ஒரு அற்புதமான சம்பவம் சில மாதங்கள் கழித்து நடந்தது. டாக்டர் அவர்கள் சுவாமிகளிடம் தான் ’பழனி மலைக்கு செல்ல இருப்பதாக’ கூறினார். அதற்கு சுவாமிகள் ’அங்கே எதற்காக செல்கிறாய்?’ என்றும் ’அங்கு என்ன செய்வாய்?’ என்றும் கேட்டார். அதற்கு மருத்துவர் ’முருகனைத் தரிசிக்க செல்வதாகவும், அங்கு என்ன செய்வது என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனவும், தாங்கள் வழிகாட்டினால் அதன்படி செய்கிறேன்’ என்று கூறினார்.
அதற்கு குருநாதர் ’இப்பொழுது வேண்டாம், நான் கூறும்போது செல்’ என்று சொல்லி விட்டார். அதன்படி ஒரு மாதம் கழித்து, “நாளைக்கு பழனிக்கு கிளம்பு" என்றும் அங்கு சில இடங்களைக் கூறி, “அங்கே தியானம் செய்து அதன்பின் குருவை நினைத்து அவ்விடங்களை உற்றுப்பார், சில அற்புதமான காட்சிகளும் சில ரகசியங்களும் தெரியும்” என்றார். அவரும் குருவின் கட்டளையை பணிந்து அவர் கூறிய இடங்களில் தியானித்து உற்றுப் பார்க்கையில், அங்கே பழனி தண்டாயுதபாணியின் கருவறையின் கீழே சித்தர்கள்தவமியற்றுவதைக் கண்டார்.
அதுமட்டுமல்ல இவர் தியானித்து இருக்கையில் முருகனே ஒரு சிறுவனைப் போல பச்சை வேட்டி அணிந்து அவர் முன் நின்று ”முருகனை பார், முருகனை பார்” என்று சொல்லிக் கொண்டே கருவறையை காட்டியபடி கைகளை நீட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து “சொன்னதை பார்த்தாகி விட்டது கிளம்பு” என்றாராம்.
அதேபோல வேறொரு இடத்திற்கு சென்றதும் ஒரு பெரியவர் உருவில் வந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தை காண்பித்து, ”மகனே! இங்கு அமர்ந்து தியானம் செய், என்ன சொல்லி விட்டானோ அதை செய்" என்று கூறினாராம். மருத்துவரும் தியானத்தில் அமர்ந்து விட, நேரம் கடந்ததை அறியாமல் விழிக்கையில் யாரும் அங்கு இல்லையாம்.
மறுநாள் ஆசிரமம் வந்து தன் குருவிடம் நடந்ததையும் தான் கண்டதையும் கூறினார். அதற்கு சுவாமி, ”அட! வந்தவனை ஏன் விட்டாய், விபூதி வாங்கியிருக்க வேண்டியதுதான, நீ பார்க்க போனதே அவனைத்தான்” என்றார்.
சுவாமிகள் ஆண்டுதோறும் வெள்ளிங்கிரி மலையை அடுத்துள்ள முத்திக்குளம் சென்று தவம் இயற்றுவார். இன்றளவும் கூட அவ்விடமானது மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனமாக உள்ளது.
சில நட்கள் கழித்து வழக்கம் போல் மலையில் உள்ள கிருஷ்ணன் குகையில் தவம் செய்கையில் அவருக்கு காமதேனு காட்சி அளித்தது. அவர் முன் நின்ற காமதேனு தன் ஒவ்வொரு முலைக்காம்பினில் இருந்து பால் சொரிந்தது. அதை குருநாதர் அருந்தியவாறு இருக்கையில் நான்காவது காம்பில் பால் அருந்தும் போது காமதேனு குருவிடம் ”உனக்கு இன்னும் பாசம் விடவில்லை” என்றது.
”தன்னை நம்பியிருக்கும் சீடன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பாசம் என்றால் அதுவும் தவறு என்று நீ சொன்னால், உன் அருளை விட என்னை நம்பி வந்த சீடனின் நலம் தான் எனக்கு முக்கியம், உன் அருள் எனக்கு வேண்டாம், நீ சென்றுவிடு” என்றபடி மலையில் இருந்து இறங்கி ஆசிரமம் வந்து விட்டார்.
நடந்ததை தன் சீடனிடம் கூறிய போது ”ஏன் சாமி என்னை பத்தி நினைச்சீங்க, உங்களுக்கு கிடைக்கும் அருள் கிடைக்கவில்லையே” என்று வருந்தினார் சீடர். இதை கேட்ட குருநாதர் ”அதை விட்டு விடு, கூப்பிடறமாதிரி கூப்பிட்டா வந்திருவா”என்றாராம்.
ஒரு நாள் பெளர்ணமியன்று இரவு ஆசிரமத்தில் தங்கிய டாக்டரை அழைத்து விடியற் காலை 2.30 மணிக்கு நொய்யல் ஆற்றிற்கு கூட்டிச் சென்றார். ஆற்றின் நடுவே கிழக்கு திசை நோக்கி தியானம் செய்ய சொன்னார். சிறிது நேரம் கழித்து ஆகாயத்தை பார்க்க கட்டளையிட்டார். அப்போது டாக்டர் அவர்கள் அந்த அதிசய நிகழ்வினை கண்டு மெய்சிலிர்த்தார். அது என்னவென்றால் சப்த ரிஷிகளும் நட்சத்திர வடிவமாக, தற்போது ஆசிரமம் அமைந்துள்ள இடத்தை வலம் வந்து, அதன் பின் வெள்ளிங்கிரி மலையுச்சியை சென்றடைவதை கண்டார்.
குருநாதர் “என்ன தெரிந்தது?" என்று கேட்க “ஏழு நட்சத்திரங்களாக என் கண்ணிற்கு வலம் வருவது தெரிந்தது” என்று கூற, ”சரி, இன்னும் சிறிது காலம் போகட்டும்” என்று அழைத்து வந்தார்.
இவ்வாறு சுவாமிகள் பலவகை சித்துக்கள் கைகூடியிருந்த போதும், அதை அவர் யாரிடமும் வெளிக் காட்டிக் கொள்ளவே இல்லை. கடும் மழை பெய்த பொழுதும் தன் மீது ஒரு துளிகூட விழாமல் நனையாமல் நடந்து கொண்டிருபபார். அவருடைய சீடர்களின் மனபக்குவத்திற்கு தகுந்தவாறு தன்னை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையில், சுவாமிகளை முழுமையாக உணரும் பக்குவம் யாருக்கும் இல்லை என்பதே உண்மையாகும். சித்து விளையாடுவதில் மட்டும் வல்லவர் அல்ல அவர். சித்த மருத்துவத்திலும் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கு சில நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கிறது.
சுவாமி சோரியாசிஸ் என்ற சரும நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வைத்தியம் செய்தார். அவரை ஒரு வாரம் தன் குடிலில் இருக்கச் செய்து, இந்த உணவு இவ்வாறு தான் உட்கொள்ள வேண்டும் என்றும் கசாயம் மருந்து ஆகியவைகளைத் தயாரித்து உண்ணக் கொடுத்து, பல மூலிகை பச்சையங்களை தானே கல்வத்தில் அரைத்து அவரை வெயிலில் உட்கார செய்து அவரது சீழ் வடியும் உடம்பில் எவ்வித அருவருப்பும் இல்லாமல் தன் கைகளாலே மருந்தை தடவி நீவி விடுவார். அந்த மருந்து உலர்ந்த பிறகு பொடியாக உதிருமாம், இவ்வாராக ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர அந்த நபர் அந்நோயில் இருந்து முற்றிலும் குணம் அடைந்தார்.
அதுமட்டும்மல்லாமல் ஒரு சமயம் டாக்டர் அவர்கள் சுவாமியை காண சென்றபோது, அங்கு அருகில் வசித்து வந்த ஆதிவாசி ஒருவர் காட்டுவேலையில் ஈடுபட்டபோது அரிவாளால் கைவிரல் வெட்டப்பட்டு துண்டான நிலையில் (அதாவது விரலின் நுணி மட்டுமே கைகளில் ஒட்டியிருந்தது) சுவாமியிடம் ஓடி வந்தார். "சாமி விரலு துண்டாயிடுச்சு சாமி' என்று வருந்தி வேதனையுடன் அழுதார். அதை பார்த்த சுவாமிகள் அருகில் வேலியில் இருந்த தான் விளைவித்திருந்த மூலிகையின் பச்சிலை சாற்றை தன் கைகளால் நன்றாக கசக்கி பிழிந்து, அதை அந்த வெட்டுப் பட்ட விரலின் மீது விட்டு, அதே பச்சிலையால் நன்றாக கட்டி விட்டார். அவரை ஒருவாரம் அந்த கட்டை அவிழ்க்க கூடாது என்றும் அடுத்த வாரம் வந்து பார்க்குமாறும் சொன்னார். பிறகு டாக்டரை பார்த்து ”ஏண்டா, இப்படி ஒரு ஆள் விரல் துண்டுப்பட்டு உங்க மருத்துவமனைக்கு வந்தார் என்றால் என்ன பண்ணுவீங்க?" என்றார்.
அதற்கு டாக்டர் “என்ன சாமி பண்ணமுடியும்? அடிப்பட்ட இடத்தில் கிருமிகள் பாதிக்காமல் இருக்க தையல் போட்டு வைத்தியம் செய்வோம்" என்றார்.
“அப்போ அந்த விரலின் நிலைமை?” என்று சுவாமி கேட்க "அது அவ்வளவுதான் சாமி அதை அகற்றிவிடுவோம்” என்றார்.
”இதுதானா உங்க வைத்தியமுறை?” என்ற சொல்லியவர் “அடுத்த வாரம் நீயும் வந்து என்ன நடக்க போகுதுன்னு பார்,” என்று கூறினார். ஒருவாரம் கழித்து ஆசிரமம் வந்து பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேலிட்டது. ஏனெனில் அந்த நபருடைய விரலில் துண்டிக்கப்பட்ட தடயம் சிறிது கூட இல்லாமல் இருந்தது, மேலும் அவர் இயல்பாக அவ்விரல்களின் உதவியால் வேலையும் செய்தார்.
இவ்வாறு சித்த மருத்துவத்தின் அதிசய குணங்களை மிகவும் நுணக்கமாக கையாண்டு பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
இவ்வாறாக தனது பிரதம சீடரான மருத்துவர் நாகராஜ் உடன் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பல.
அதுமட்டுமல்ல, சுவாமிகள் தன் சீடர்களின் ஒருவரான திரு.மதுரலால் என்பவருக்கு பிராணாயாமத்தை பயன்படுத்தி தண்ணீரில் மிதக்கும் கலையையும், ஆசனங்கள் மூலமாக நோய்கள் குணமாகும் வழிகளையும் பாதரசத்தினால் வெண் குட்டம் போன்ற பல நோய்கள் குணமாகும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த திரு.நரேந்திரன் என்பவருக்கு மருத்துவம், இரசவாதம் போன்ற முறைகளை கற்றுக் கொடுத்துள்ளார். அவர்கள் குடும்பத்தினர் இன்றளவும் பயனடைந்து வருகின்றனர்.
குருநாதர் அவர்கள், இசை, மருத்துவம், தவம் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த விவசாயியும் ஆவார். தன் தவகுடிலின் அருகில் அனைவரும் பயனடையும் வகையில் காய்கறிகள் பயிர் செய்வார். ஒரு பூசணிக்காய் 80கி அளவில் விளைந்தது என்பது அவரின் தவ ஆற்றலை குறிக்கிறது.
தன்னை காணவரும் அனைவருக்கும் சிவன் சொத்து எல்லோருக்கும் சொந்தம் என்றும் எடுத்துச் செல்லுமாறு கூறுவார்.
இயற்கையோடு இயைந்து வாழும் சூழலின் ஆற்றலையும் அதன் அற்புதத்தையும் தானும் வாழ்ந்து காட்டினார். காட்டில் வாழும் விலங்கினங்களும் அவர் தன் அசைவிற்கும் தன் ஞானப் பேரொளிக்கும் கட்டுப்பட்டு பரிவுடன் பழகின. கொடிய விலங்குகள் வாழும் வாழிடத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல், பயமும் இல்லாமல் தனியாக நடந்து வருவார். அவை தன் அருகில் வந்தாலும் ஏதும் தீண்டாமல் அமைதியாக செல்லும்.
சுவாமிகளுடன் ஆசிரமத்தில் கருநாகம் ஒன்று எப்போதும் இருக்கும். அதனுடன் சுவாமிகள் விளையாடுவதை பிரதான சீடரான டாக்டர் அவர்கள் பலமுறை பார்த்ததை நம்முடன் பகிர்ந்துள்ளார். ஆனால் அது பிறர் கண்களுக்கு அவ்வளவு எளிதில் தென்படாதாம். இன்றளவும் அது அங்கேயே இருப்பதை பலரும் கண்டுள்ளனர். தீய எண்ணங்களுடன் ஆசிரமம் வருபவர்களை விரட்டி அடித்த சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளன. பக்தர்களுக்காக இறைவனிடம் வாக்குவாதம் செய்யும் குரு நாதரின் அன்புள்ளத்தில் மருத்துவருக்கு மட்டுமல்ல எல்லா பக்தர்களுக்கு இடம் கிடைக்கும்.
தான் கற்ற வித்தைகளில் மிக முக்கியமான வாசியோகத்தை முழுமையாக தன் ஆத்ம சீடரான டாக்டர் நாகராஜ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1985 ஆம் ஆண்டு தன் சீடரை அழைத்து தன் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து, அடுத்த ஆண்டு தான் ஜீவேஸ்வர ஐக்கியம் அடைந்து விடுவதாக கூறியுள்ளார். ஆதலால் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் அன்னமளிப்பு மற்றும் விழாக்களை சிறப்புடன் நடத்தி வருமாறு ஆணையிட்டார்.
சுவாமிகள் கூறியது போலவே, 1986ம் ஆண்டு, மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பூரண ஜீவேஸ்வர ஐக்கியம் அடைந்தார். அவ்விடத்தில் ஜீவசமாதி எழுப்பி ஞான தீபம் இன்றளவும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தினத்தை குருபூஜையாக வருடந்தோறும் வழிபட்டு வருகின்றோம்.
சற்குருவின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர் தம் சீடர்களுடன் நிகழ்த்திய சம்பவங்களால் மட்டுமே அறிய முடியும். குருவானவர் தன் வரலாற்றைத் தானே எழுதுவதில்லை. சூக்கும தேகத்தில் இறைவனாக இருக்கும் நம் குருவின் ஆசியும் அருளும் அன்பும் தேடி வருபவர்களுக்கு அவர் என்றைக்கும் கூடவே இருந்து வழிகாட்டி வாழையடி வாழையாக நம்முடன் வாழ்ந்து வருகிறார்.
முற்றுப் பெறாத சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசரிதம் இனியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
குருவே சரணம்!
குறிப்பு : சுவாமி தனது பக்தர்களுடன் நிகழ்த்திய அற்புதங்களை புத்தகத்தில் முழுமையாகப் படிக்கலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்.
சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி சாரிட்டபிள் டிரஸ்ட்
சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் 1986ம் வருடம் பிப்ரவரி மாதம் வெள்ளிக்கிழமை, 21ம் தேதி ஜீவேஸ்வர ஐக்கியம் ஆன பிறகு, குருவின் மீது கொண்ட பக்தியின் காரணமாய் ஜீவசமாதியை முழுவதுமாய் உருவாக்கியவர் மருத்துவர் நாகராஜ் அவர்கள்.
சுமார் 32 வருடங்களாக குருபூஜை, கார்த்திகை தீப பெருவிழா ஆகிய விழாக்களையும், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தையும் இனிதே நடத்தி வந்தார்.
மருத்துவர் தன் இறுதி காலத்தினை உணர்ந்த பிறகு, குரு நாதரின் உத்தரவின் படி ஜோதி சுவாமியை ஜீவசமாதியில் குருபூஜை செய்து வர குருவின் ஆணைப்படி
பணித்தார். மருத்துவர் தம் குரு நாதரின் பாதகமலங்களைச் சேர்ந்த பிறகு அவரது ஒரே மகளான ராஜேஸ்வரியின் சீரிய தலைமையின் கீழ் ஜீவசமாதியின் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
தற்போது காலை 7.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னமளிப்பும், குருபூஜை, கார்த்திகை தீப பெருவிழா, வாரம் தோறும்
பக்தர்கள் பொருளாதாரத்தில் மேன்மையடைய திருமூலர் வழங்கிய திருமந்திரத்தில் அருளப்பட்ட நவாக்கரி மந்திரம் ஜெபித்தல், வியாழன் தோறும் வாசியோகப் பயிற்சி,
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் முழுவதும் விடிகாலையில் பிரசாதம், பொதுமக்களுக்கு நோய்ப்பிணி தீர்த்தும், பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறது
சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி சாரிட்டபிள் டிரஸ்ட்.
சுவாமியின் ஜீவசமாதி அரசு பதிவு பெற்ற ‘சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி சாரிட்டபிள் டிரஸ்ட்’ மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்த டிரஸ்டின் நிர்வாகிகள்
தன் நலம் ஏதுமின்றி குரு நாதருக்கும், தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் இறைப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.